வன்முறைப் போராட்டக்காரர்களால் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து நாடு அராஜகமாக மாறாமல் தடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் விமானப்படை முகாமில் முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப் படையினர் மற்றும் பொலிஸாரிடம் உரையாற்றிய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு ஆயுதப்படை பொலிஸாருக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருக்கும் போது நாட்டின் சட்டம் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



