வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு நிதி சன்மானம் வழங்கப்படும் என இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, உள்நாட்டு வருமானச் சட்டத்தின் 211வது பிரிவின் கீழ் வரி ஏய்ப்பாளர்களைப் பொறுத்த வரையில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வரிகள் வசூலிக்கப்படும் போது சேகரிக்கப்படும் வருவாயில் 15% வரை நிதி வெகுமதியாக வழங்கப்படும்.
அதன்படி, ஒருவரிடம் வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகம் வரக்கூடிய தகவல்கள் இருந்தால், அந்தத் தகவலை ரகசியமாக அளிக்கலாம்.
இவ்வாறானவர்கள் தொடர்பில் முடிந்தளவு தகவல்களை வழங்க முயற்சிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தும் திறன் தங்களிடம் இருப்பதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மதிப்புக்கூட்டு வரி மோசடி, தவறான விலக்குகள், பொய்யான ஆவணங்கள், தெரிவிக்கப்படாத வருமானம், லஞ்சம், நெறிமுறையற்ற வணிக நடைமுறைகள், வரி செலுத்தத் தவறுதல், வருமானத்தை தாக்கல் செய்யத் தவறுதல் மற்றும் வாடகை வருமானத்தில் சட்ட மீறல்கள் பற்றிய தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கப்படும் தகவல்கள் முழு இரகசியத்துடன் பேணப்படும் என்றும், வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பான மேலதிக தெளிவுபடுத்தலுக்குத் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறிப்பிடுகிறது.