கடந்த காலங்களில் நாடும் மக்களும் சந்திக்க நேர்ந்த துரதிஷ்டமான யுகத்தை அடுத்த தலைமுறையினர் சந்திக்காத வகையில் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
கடனை அடைக்கும் வேலைத்திட்டம் வெற்றியடைவதால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது எனவும், சரியான தீர்மானங்களுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாவிட்டால் இன்னும் 10 வருடங்களில் நாடு மீண்டும் ஒரு பொருளாதார சவாலுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை புனித தோமஸ் ஆண்கள் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (13) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சகல துறைகளிலும் நவீனமயமாகி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தமது நம்பிக்கை எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு தொழில்நுட்ப ஊக்குவிப்பு சபையையும் டிஜிட்டல் உருமாற்ற ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதாகத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித். யு. கமகே, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி எம்.பி.பி. தெஹிதெனிய, முப்படைப் பதவிநிலைத் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, NSBM பசுமைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சமிந்த ரத்நாயக்க, மாத்தளை புனித தோமஸ் கல்லூரி அதிபர் தம்மிக்க ஹேவாவசம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.