(vavuniya tamil news) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாந்தன் என்ற சுதேந்திர ராசா சில தினங்களுக்கு முன் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் சாந்தன் அவர்களின் பூதவுடல் இன்றையதினம் (03-03-2024) காலை வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதன்போது அங்கு பெருந்திரளமாக மக்கள் குவிந்து சாந்தனின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், மலர் மாலை அணிவித்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அதன்பின்னர், சாந்தனின் பூதவுடல் மாங்குளம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சி பசுமை பூங்காவில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டவுள்ளது.
இதனையடுத்து, யாழ். கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த ஊரான உடுப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதன்பின்னர், இன்று மாலை பூதவுடல், அவரது சொந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளைய தினம் எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றைய தினம் தமிழ்த் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க வடக்கு மற்றும் கிழக்கு பொது அமைப்புக்கள் கூட்டாக அறிவித்திருந்தனர்.
அதன்படி பல பகுதிகளிலும் கருப்புக் கொடி பறக்க விடப்பட்டு துக்க தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



