கொழும்பில் பொலிஸார் போல் நடித்து கொள்ளையடித்த சந்தேகநபர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொள்ளையடித்து

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெடவலமுல்லை சந்திக்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தம்மை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீதியில் சென்று கொண்டிருந்த நபரை சோதனையிட்டு சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் பணப்பையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 


இவை தேவையென்றால் 35,000 ரூபா பணத்துடன் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறி சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.


பின்னர் நேற்று (15) மருதானை பொன்சேகா மாவத்தை பகுதியில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அவர் வந்த மோட்டார் சைக்கிள், குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையது எனத் தெரியவந்ததையடுத்து, அவரிடம் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


மேலும் சந்தேகநபரின் வீட்டில் வைத்து கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசியை பொலிஸாரால் கைப்பற்றியுள்ளனர்.




மற்றைய சந்தேக நபரைக் தேடி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




சிவில் உடையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி நபர்களையோ அல்லது சொத்துக்களையோ தேடும் போது, ​​அவர்களின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி அறிந்து கொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு  உள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்