சட்டவிரோத விகாரை அகற்றப்படும் வரை போராடுவோம்! - கஜேந்திரகுமார் எம்.பி. சூளுரை

Jaffna News Tamil

சட்டவிரோத விகாரை அகற்றப்படும் வரை போராடுவோம்! - கஜேந்திரகுமார் எம்.பி. சூளுரை-We will fight until the illegal temple is removed! - Gajendra Kumar MP Choolai


 தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை அகற்றப்படும் வரையில் நாம் ஓயாது தொடர்ந்தும் போராடுவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


தையிட்டியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"தையிட்டியில் மக்களின் காணிகளுக்குள் கட்டப்பட்ட விகாரையை அகற்றி தமது காணிகளை மீட்டுத் தருமாறு காணி உரிமையாளர்கள் எங்களிடம் கேட்டிருந்தனர்.


அதற்கமைய நாங்கள தொடர்ச்சியாகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தோம். இதற்கமைய இந்த விகாரை அகற்றப்படும் வரையில் நாம் ஓயாது தொடர்ந்தும் போராடுவோம்.


இங்கு சட்டங்கள், விதிமுறைகளை மீறி இந்த விகாரையை இராணுவம் கட்டி முடித்துள்ளது. ஆனாலும், இந்த விகாரை சட்டபூர்வமானது அல்ல என்பதை விகாரைக்கென்று வருகின்ற அப்பாவி சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.


இந்த விகாரை கட்டப்பட்டதாலே இங்கு புத்தர் என்ற பெயரில்  நடக்கின்ற  அநியாயங்களை அப்பாவி சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விகாரையைத் தொடர்ந்து வைத்திருப்பதில் அர்த்தம் இல்லாமல் போகும்.



போராட்டங்கள் தொடர்ந்து பலமாக அமைகின்றபோதுதான் தீர்வை அடையலாம். இதற்கமைய பலரும் இன்றைக்கு வந்து இருந்தனர். அனைவரதும் ஆதரவினால்தான் இந்தப் போராட்டம் வெற்றியளித்து இருக்கின்றது.


இதேவேளை, இன்னுமொரு விடயத்தையும் நாங்கள் சொல்ல வேண்டியுள்ளது. அதாவது நாங்கள் இனவாதியோ மதவாதியோ அல்ல. ஆனால், இங்கே இருக்கக்கூடிய மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அடாத்தாக கட்டப்பட்ட விகாரையை எதிர்த்துப் போராடுகின்றோம்.



தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரான செயற்பாடுகள் எதுவானாலும் நாங்கள் எதிர்ப்போம்.  இன்றைய போராட்டத்தை விடவும் அடுத்த பௌர்ணமிக்கு அதிகளவில் மக்கள் திரள வேண்டும்.


மேலும் உரிமைக்கான எமது இந்தப் போராட்டம் இன்னும் இன்னும் பலமடையும். இதற்குப் பின்னால் ஒட்டுமொத்த இனமும் அணிதிரளும். மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.



கட்சி பேதங்களுக்கப்பபால் ஒன்றிணைந்து வந்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக சட்டத்தின் ஆட்சியைப் பற்றிக் கதைக்கும் அரசுதான் ஆட்சியில் இருக்கின்றது.


குறிப்பாக சட்டத்தை மீறி எப்படி ஒரு பொதுமகன் கட்டடம் கட்டினால் அது உடனடியாக அகற்றப்படுகின்றதோ அதேபோன்றே சட்டவிரோத விகாரையையும் அகற்ற வேண்டும்.


இது அகற்றபடாவிட்டால் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் ஆக்கிரமிப்புக்கு  எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


மக்களின் காணி உரிமையில் இந்த அரசு கைவைக்கின்றது என்றால் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கைவைப்பதாக அமையும்." - என்றார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்