( srilanka tamil news-tamillk ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவால் தடைசெய்யப்பட்ட அமைப்பு பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் புதிய மக்கள் முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பின் சொற்பிரயோகங்களை சம்பந்தன் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிடம் முறைப்பாடு ஒன்றை இன்று கையளித்துள்ளனர்
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் இவ்வாறாக பிரிவினைவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை இரு நாடுகளும் இணைந்து உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிடம் முன்னணியினர் கோரியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து இலங்கையில் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அந்த முயற்சியை தடுக்கும் வகையில் இரா.சம்பந்தனின் கடிதம் அமைந்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டுவதற்காக காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சொற்பிரயோகங்களுடன் சம்பந்தன் கடிதம் எழுதியிருப்பதாகவும் என புதிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தப் பின்னணியில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவை பாதிக்கும் வகையில் சம்பந்தனின் கடிதம் ஆனது அமைந்திருப்பதாகவும் இதனை இந்தியாவில் உள்ள பிரதமருக்கு கோபால் பக்லே அறிவிக்க வேண்டுமெனவும் முன்னணியினர் கோரியுள்ளனர்.



