திருகோணமலையில் பதற்றம்! பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு - Tamillk news

 Trincomalee tamil news - tamillk news

திருகோணமலை ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் பொலிஸ் தடுப்பு காவலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து திருகோணமலை ஜமாலியா பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதோடு வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.

tamillk news


குறித்த இச்சம்பவம் இன்று (23) மாலை 4.50 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை- ஜமாலியா, தக்வா நகரை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என தெரியவருகின்றது.



ஜமாலியா- கடற்கரை பகுதியில் 21ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பணத்தை திருடியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேக நபரை 22 ஆம் திகதி மாலை தலைமையக பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.



இந்நிலையில் குறித்த இளைஞர் இன்று (23) மாலை தலைமையக பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருக்கின்ற மலசல கூடத்திற்குள் தான் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது


உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


இதேநேரம் உயிரிழந்த குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நபரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் என கேள்விப்பட்டதையடுத்து சிலர் தாக்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது.


இத்தாக்குதலினால் ஜமாலியா- லவ்லேன் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.



குறித்த மரணம் தொடர்பில் திருகோணமலை- தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இருந்த போதிலும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுப்பு காவலில் வைத்திருந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு மரணத்திற்காக நீதியை பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த பகுதியில்  தற்போது பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்