வடக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர அறிவுறுத்தல்!!

  

மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என யாழ். பல்கலைக்கழக புவியற்திறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்




இன்று காலை பதிவிட்ட அவரது குறிப்பில் மேலும் தெரிவிக்கையில், 




இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamil lk News




வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடந்த 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து வருகின்றது. தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 




குளங்கள் பலவும் வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன. 


ஆகவே மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.


 குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். 


குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 




ஆகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரை அண்மித்த தாழ்நிலப்பகுதி மக்கள், மற்றும் ஏனைய தாழ் நிலப்பகுதிகளில் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது சிறந்தது.




வெள்ள நிலைமைகளை அவதானித்து முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது. 


மன்னார் மாவட்டத்திற்கு நீர் கொண்டு வரும் பாலியாறு, பறங்கியாறு போன்றவற்றின் நீரேந்துப் பிரதேசங்களில் மழை கிடைத்து வருகின்றது. எனவே இப்பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது அவசியம். 




கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் இன்றும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதோடு நாளை மறு தினம் வரை இந்த மழை தொடரும். 




மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என தெரிவித்தார். 




இந்நிலையில் வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், குருவிச்சை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவுகிறது.




எனவே பண்டாரவன்னி பகுதியில் வசிக்கும் மக்கள் நிலைமையை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.


வெள்ளம் அபாய மட்டத்திற்கு உயர்ந்தால், தயவுசெய்து உடனடியாக கருவேலன்கண்டல்  பாடசாலைக்கு பாதுகாப்பாக இடம்பெயருங்கள் என  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் பிரிவு தெரிவித்துள்ளது. 




மேலும் தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், தற்போதைய  மழை நிலையை கருத்தில் கொண்டு வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.




தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் வயல்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




அத்தோடு  முல்லைத்தீவு மாவட்டம் கோடாலிக்கல்லு குளத்தின் அணைபகுதி ஏற்கனவே உடைந்துள்ளதால், தற்போது பெய்துவரும் தொடர்ச்சியான கடும் மழையினால் அப்பகுதியில் பெருமளவு நீரோட்டம் ஏற்பட்டுள்ளது. 




இதன் காரணமாக கோடாலிக்கல்லு முன்புறத்தில் உள்ள முள்ளியவளை – நெடுங்கேணி வீதி நீரில் மூழ்கியுள்ளது.




எனவே, இந்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் முக்கியமாக இரவு நேரங்களில் பயணிப்பதை தவிர்க்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்