Mullaitivu Tamillk News - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாக்கியுள்ளது.
குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் தடைப்பட்டிருந்த மனிதப்புதைகுழி அகழ்வு பணியானது இன்று (06.09.2023) ஆரம்பமாக்கியுள்ளது.
தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன.
நிலைமைகளை அவதானிப்பாளர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசு கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கி.சிவகுரு ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
நேற்றைய தினம் அகழ்வு பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது.
அகழ்வு பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும் என கூற முடியாது என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



