யாழ்-பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து பிறந்தநாள் கொண்டாடிய ஐவர் கைது! tamillk news

 

tamillk news

jaffna news - யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு 50 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.


அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.


பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.


யாழ். நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள் அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.


அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரை கைது செய்து கடந்த சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.



அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய பிறந்தநாள்காரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு பணித்திருந்தார்.




அதனை அடுத்து பொலிஸார் அனைவரையும் கைது செய்வதற்க்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஐவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்