vavuniya news - எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இன்று (16)இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள்,
முல்லைத்தீவு நீதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம்நீதித்துறை சுயாதீனமாக செயற்ப்படமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது,அத்துடன் தமிழர் பிரச்சனைக்கு உள்நாட்டில் நீதியை காணமுடியாது என்று நாம் வலியுறுத்திய விடயத்திற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துகாட்டாகவும் அமைந்துள்ளது
இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயற்பாட்டை இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் முன்னெடுத்துவருகின்றனர்.
எனவே இந்த அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதியின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து எதிர்காலத்தில் எப்படிசெயற்ப்படவேண்டும் என்ற காத்திரமான முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்மக்களும் தமிழ்த்தேசிய கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடகிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு பொதுமக்கள் வர்த்தகசங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,தமிழ்மக்கள் விடுதலைக்கழகம் சார்பில் சந்திரகுலசிங்கம் மோகன்,தமிழரசுக்கட்சி சார்பில் ந.கருணாநிதி,ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் க.துளசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.