முல்லைத்தீவில்(Mullaitivu) -23 வயதான இளம் மனைவியை கொலை செய்த சந்தேகத்தில் பெண்ணின் கணவனையும், காதலியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு, தற்கொலை நாடகம் ஆடினாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முல்லைத்தீவு, பூதன்வயல் பிரதேசத்தில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனது மனைவி கிணற்றில் குதித்து விட்டதாக கணவன் கூக்கிரலிட்டதையடுத்து, அயலவர்கள் சிலர் ஓடிவந்து, கிணற்றில் விழுந்திருந்த இளம்பெண்ணை மீட்டு, முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே உயிரிழந்திருந்தார். வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட எஸ்.சுதர்சினி (23) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கணவர் பொலிசாரிடம்
இந்நிலையில் தனது மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக, உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிசாரிடம் தெரிவித்தார். உயிரிழந்த பெண்ணின் சடலம், உடற்கூராய்வுக்குட்படுத்தப்பட்ட போது, அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து, பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, தனது மனைவி இருக்கும் போதே அவரை விடவும் வயதில் குறைந்த காதலியையும் வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்திருந்தது தெரிய வந்தது.
காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்திருந்ததற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகின்றது.
மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில், கள்ளக்காதலியையும் முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணையும் முன்னெடுத்து வருகின்றனர்.
(Mullaitivu Tamil News....)