அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தின் போது, நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய நியமனக் கடிதத்தின் நகலை ட்ரம்ப்பிடம் நெதன்யாகு வழங்கினார்.
அப்போது ட்ரம்பிடம் பேசிய நெதன்யாகு,
"நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்தி வருகிறீர்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உங்களை பரிந்துரைத்து நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன்.
இதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர், நீங்கள் அதைப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார். 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது.
ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கது.