தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் கொத்மலா ஓயாவில் வாழும் மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கு, நீரில் இரசாயனப் பொருள் கலந்தமையே காரணம் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நிஷங்க விஜேவர்தன தெரிவித்துள்ளார். .
அம்பேவெல பிரதேசத்தில் இருந்து மெரயா, அல்ஜின், அகரகந்த, லிந்துல, தலவாக்கலை வரையில் கொத்மலா ஓயா நீர் சுமார் 40 கிலோமீற்றர் வரை பாய்கிறது அம்பேவெலயிலிருந்து லிந்துல அகரகந்த வரை சுமார் 12 கிலோமீற்றர் வரை இதே ஓயாவில் நேற்று (ஏப்ரல் 16) முதல் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன. லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரிஷி துரைராஜா கூறுகையில், இறந்த மீனின் உடல் பாகங்களை உண்ண வேண்டாம் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், கொத்மலா ஓயாவில் இருந்து சில நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக பேராதனை கால்நடை மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கொத்மலா ஓயாவில் பாயும் நீர் கருமை நிறமாக மாறியிருந்ததுடன், கொத்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 17ஆம் திகதி பிற்பகல் பெய்த கடும் மழையுடன் கொத்மலா ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று (18ஆம் திகதி) கொத்மலா ஓயாவில் பாயும் நீருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 17ஆம் திகதி அம்பேவெல பிரதேசத்தினூடாக நீர் பாயும் கொத்மலா ஓயாவிற்கு அருகில் அமைந்துள்ள கால்நடை பண்ணையை பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்ததோடு நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சில நீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
கொத்மலா ஓயாவின் நீரானது ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் சிலர் விவசாயம் மற்றும் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.



