'ஜெயபூமி அறக்கட்டளை' என்ற போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பல இளைஞர், யுவதிகளிடம் மோசடியாக பணம் வசூலித்த பாரிய மோசடி தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மியாமி நகரத்தில் உள்ள துறைமுக திட்டத்தில் பல வேலைகளை வழங்கப்படும் என போலியாக செயல்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
பணம் மோசடி
குறித்த நிறுவனத்தின் பிரதான சந்தேகநபர் வேலையில்லாதவர்களிடம் மோசடி செய்துள்ள பணத்தின் தொகை மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும், இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த நபரை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு போலியாக செயல்பட்டு வந்த நிறுவனத்தை பற்றி தகவல் கிடைத்ததும். உடனடியாக செயற்பட்ட அலுவலக அதிகாரிகள், ராஜகிரியவில் உள்ள 'ஜனஜெய சிட்டி' கட்டிடத்தில் மோசடியாக இயங்கி வந்த நிறுவனத்தை சோதனையிட்டு 636 வேலை தேடுபவர்கள் தொடர்பான கோப்புகளை கைப்பற்றியதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் மேலதிக விசாரணையில், பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட நபர், மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த மோசடியை நடத்தி வந்துள்ளார்.
மேலும் அவர் அமெரிக்காவில் விசா பெற விண்ணப்பிப்பதற்காக 400 பேரிடம் இருந்து தலா 75,000 ரூபா வீதம் வசூலித்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் திடீர் சோதனைக்காக பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் முகாமையாளர் திரு.கபில கருணாரத்ன, ரவீந்திர அபேபால, எம்.கே.சுமணவீர, இடுனில் புஷ்பகுமார, சஞ்சீவ தர்மசிறி மற்றும் ஐ.சி. ஜானகி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.



