அரசாங்கத்தின் புதிய திட்டம் : 20 லட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

 

srilanka tamil news-tamillk

அரசாங்கத்தின் பலவிதமான மக்களின் நலன் குறித்த திட்டங்களில்“அஸ்வெசும” நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு இதனை தெரிவித்தார்.



இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக "அஸ்வெசும" நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் நடத்திய கலந்துரையாடல்களில் வறிய மக்களை அந்த நிலைமையில் இருந்து மீட்பதற்கு குறைந்தது 187 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை 206 பில்லியன் ரூபா வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளது.




வெளிப்படைத்தன்மையுடன் மிகவும் பொருத்தமான குழுவிற்கு இதன் கீழ் நன்மைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த மாதத்திலேயே நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள்.



கடந்த வருடம் 144 பில்லியன் ரூபாவை அரசாங்கம் நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக செலவிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் நாட்டில் வறுமை ஒழிப்புக்காக வருடாந்தம் 206 பில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்த்துள்ளது.




அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த “அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தில் சுமார் 20 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு நன்மைகள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது சமுர்த்திக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்ப அலகுகளில் 12,80,747 குடும்பங்கள் இந்த “அஸ்வெசும” வேலைத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன. அதில் சுமார் 8,87,653 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன .



அவ்வாறாயின் தற்போது சமுர்த்தி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களில் “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளவர்களில் 70 வீதமான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.


தற்போது அங்கவீனர்கள், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கு அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.




புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக” அமைச்சர் தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்