கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி குன்றின் மீது கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்கள விதுஹலக்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிர்திசையில் இருந்து வந்த பேருந்துக்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் பயணித்த 18 பேர் காயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த ஏனையவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
பேருந்து விபத்துக்குள்ளான போது, பேருந்தில் சுமார் 100 பேர் பயணித்துள்ளதாக, காயமடைந்த வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவர் தெரிவித்தார்.



