சமரவிக்ரம அதிரடி :  257 ஓட்டங்களை குவித்தது இலங்கை Tamillk News

 

tamillk news
சமரவிக்ரம அதிரடி :  257 ஓட்டங்களை குவித்தது இலங்கை Tamillk News

 Sports Tamil News - பங்களாதேஷுக்கு எதிராக ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது.


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது தனிப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சதீர சமரவிக்ரம, அரைச் சதம் குவித்த குசல் மெண்டிஸ், சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க ஆகியோர் இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.


பெத்தும் நிஸ்ஸன்கவும் திமுத் கருணாரட்னவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஹசன் மஹ்முதின் பந்துவீச்சை சரியாக புரிந்துகொள்ள முடியாதவராக விக்கெட் காப்பாளர் முஷ்பிக்குர் ரஹிமிடம் பிடிகொடுத்த  திமுத் கருணாரட்ன 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.




தொடர்ந்து நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை சிறுக சிறுக அதிகரிக்க உதவினர்.


இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷொரிபுல் இஸ்லாமின் மிகவும் திறமையான உள்நோக்கிய பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் 40 ஓட்டங்களுடன் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்தார். (108 - 2 விக்.)


9 ஓட்டங்கள் கழித்து அதே பந்துவீச்சாளரின் பவுன்சர் பந்தை அடிக்க முயற்சித்த குசல் மெண்டிஸ் இலகுவான பிடி ஒன்றைக் கொடுத்து 50 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். (117 - 3 விக்.)


அவரைத் தொடர்ந்து சரித் அசலன்க (10), தனஞ்சய டி சில்வா (6) ஆகிய இருவரும் தவறான அடி தெரிவுகளினால் ஆட்டம் இழந்தனர். (144 - 5 விக்.)


எனினும் சதீர சமரவிக்ரமவும் தனது 32ஆவது பிறந்த தினத்தை இன்று (செப்டெம்பர் 9) கொண்டாடும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் அணியை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.


எனினும் ஹசன் மஹ்முதின் பந்தை தசுன் ஷானக்க பின்னோக்கி அடிக்க முயற்சித்தபோது பந்து அவரது துடுப்பில் பட்டு விக்கெட்டைப் பதம் பார்த்தது. (224 - 6 விக்.)


கணிசமான ஓட்டங்கள் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட துனித் வெல்லாலகே அவசர ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து 3 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். அடுத்துகளம் நுழைந்த மஹீஷ் தீக்ஷன 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். (246 - 8 விக்.)

மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 93 ஓட்டங்களைப் பெற்றார். தஸ்கின் அஹ்மதின் பந்தை சுழற்றி அடிக்க முயற்சித்து பதில்வீரர் அபிப் ஹொசெய்னிடம் பவுண்டறி எல்லையில் பிடிகொடுத்து சதீர சமரவிக்ரம ஆட்டம் இழந்தார்.


பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


258 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்