![]() |
| நரேந்திர மோதி - ஜோ பைடன் சந்திப்பில் என்ன பேசப் போகிறார்கள் |
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர்.
டெல்லியில் நாளை (செப்டம்பர் 9) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 10) இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு நடக்கிறது.
உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இன்று (செப்டம்பர் 8) மாலை இந்தியா வந்தடைந்தார்.
இன்று இரவு ஜோ பைடன், பிரதமர் மோதியுடன் தனிப்பட்ட விருந்தில் பங்கெடுக்கிறார். அப்போது இரண்டு நாட்டின் தலைவர்களுக்கு இடையிலும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, “இன்று மாலை எனது இல்லத்தில் மூன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த உரையாடல் மூன்று நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பாகும்,” எனக் கூறியுள்ளார்.
ஜி-20 உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோதி 15 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூய்மையான எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுடப்ம், பாதுகாப்பு போன்ற துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இந்தியா வருகிறார். இதற்கு முன்னதாக, 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு வந்திருந்தார்.
இன்று இந்தியா வந்துள்ள ஜோ பைடன், பிரதமர் மோதியை சந்திக்கிறார். பிறகு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஜி20 மாநாட்டில் பங்கேற்பார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை மதியம் வியட்நாம் செல்கிறார்.
இந்தியா- அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே வழங்கப்படும் விசா குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.
கடந்த ஜுன் மாதம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோதி, அடுத்த தலைமுறை மாடுலர் ரியாக்டரின் தாெழில்நுட்பம் குறித்துப் பேசினார். தற்போது, பைடனின் இந்தியா வருகையின்போது, இந்த விஷயம் குறித்தும் பேச வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த ஆண்டு ஜி20 மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் இந்திய பிரதமர் மோதி பதவியேற்றிருப்பதற்காக நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம். இந்தியாவில் நடக்கும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்றார்.



