ஸிம்பாப்வேவுடனான தோல்வியின் பின் ஹசரங்க தெரிவித்த கருத்து! tamillk news

 ஸிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் மூன்று துறைகளிலும் நிறைய தவறுகள் இழைத்தோம். இத்தகைய போட்டிகளில் தவறுகள் இழைத்தால் வெற்றிபெறுவது கடினம் என போட்டியின் பின்னரான ஊடக சந்திப்பில் இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்தார்.

sports tamil news-tamillk


கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் மிகவும் விறுவிறுப்பை தோற்றுவித்த இந்தப் போட்டியில் இலங்கையை 4 விக்கெட்களால் ஸிம்பாப்வே வெற்றிகொண்டது. இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையை ஸிம்பாப்வே வீழ்த்தியது இதுவே முதல் தடவையாகும்.


இப் போட்டி முடிவுடன் தொடர் 1 - 1 சமப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீர்மானம் மிக்க கடைசிப் போட்டி வியாழக்கிழமை (18) நடைபெறவுள்ளது.


இரண்டாவது போட்டியின் கடைசி ஓவரில் ஸிம்பாப்வேயின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மெத்யூஸ் வீசிய அந்த ஓவரில் ஒரு நோபோலுடன் ப்றீ ஹிட் உட்பட 5 பந்துகளில் 24 ஓட்டங்களை (7 நோபோல், 4, 6, 0, 1, 6) லூக் பொங்வேயும் மதண்டேயும் விளாசி ஸிம்பாப்வேயின் வெற்றியை உறுதி செய்தனர்.


அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ஜொங்வே கொடுத்த மிகவும் இலகுவான பிடியை மஹீஸ் தீக்ஷன தவறவிட்டது இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றதைக் கொடுத்தது.


கடைசி ஓவர் குறித்து வனிந்து ஹசரங்கவிடம் கேட்டபோது,


'கடைசி ஓவரில் 20 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்பது இத்தகைய மைதானத்தில் மிகப் பெரியதாகும். அதனைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது. ஆனால், நாங்கள் மூன்று துறைகளிலும் (துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு) நிறைய தவறுகள் இழைத்தோம் என நினைக்கிறேன். இவ்வாறான போட்டிகளில் இத்தகைய தவறுகள் இழைத்தால் போட்டியில் வெற்றிபெறுவது கடினம்' என்றார்.




மேலும் இந்தப் போட்டியின் ஆரம்பத்திலேயே 4 விக்கெட்கள் வீழ்ந்தது அணிக்கு பாதிப்பைத் தோற்றுவித்தது என அவர் குறிப்பிட்டார்.


'மொத்த எண்ணிக்கையில் 15 ஓட்டங்கள் குறைவாக இருந்தது என கருதுகிறேன். ஆரம்பத்திலேயே 4 விக்கெட்கள் வீழ்ந்தது (4.4 ஓவர்களில் 27 - 4 விக்., பவர்ப்ளே நிறைவில் 31 - 4 விக்.) எமக்கு பாதகமாக அமைந்தது. ஏஞ்சலோ மெத்யூஸும் சரித் அசலன்கவும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தனர். எனினும் களத்தடுப்பிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தால் வெற்றிபெற்றிருக்க முடியும் என நினைக்கிறேன்.




'ஏஞ்சலோ மெத்யூஸ் முதல் இரண்டு ஓவர்கள் களத்தடுப்பில் ஈடுபடாமல் இருந்தது தாக்கத்தைக் கொடுத்தது. ஆனால், அதிலிருந்து விடுபட எதையும் நியாயப்படுத்த விரும்பவில்லை. சிறந்த பந்துவீச்சாளர்கள் நால்வர் போட்டியில் விளையாடினோம். எஞ்சிய 4 ஓவர்களை 2 சகலதுறை வீரர்களைக் கொண்டு நிறைவுசெய்யவேண்டும். அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், பனி இருந்ததால் அதுவும் பாதிப்பைக் கொடுத்தது' என்று வனிந்து ஹசரங்க கூறினார்.




முதலிரண்டு போட்டிகளில் பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் கணிசமான ஓட்டங்களைக் கொடுத்திருந்தனர். அவர்களை விட வேகபந்துவீச்சில் எத்தகைய கூட்டை ஏற்படுத்த எண்ணியுள்ளீர்கள் என ஹசரங்கவிடம் வினவியபோது,


'எமது அணியில் நுவன் துஷார, மதீஷ பத்திரண ஆகிய சிறந்த பந்தவீச்சாளர்களும் இடம்பெறுகின்றனர். அவர்களும் தங்களால் திறமையாக பந்துவீச முடியும் என்பதை காண்பித்துள்ளனர். அதேவேளை, துஷ்மன்த சமீரவும் டில்ஷான் மதுஷன்கவும் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவார்கள். பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் எம்மிடம் திறமைசாலிகள் இருக்கின்றனர். எனவே அடுத்த போட்டியில் சிறந்த பந்துவீச்சு கூட்டை அமைத்துக்கொண்டு விளையாட எதிர்பார்த்துள்ளோம்' என பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்