(vavuniya tamil news) வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற வழிபாட்டில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் எதிர்ப்பு போராட்ட பேரணியொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப் போராட்டமானது இன்று காலை நெடுங்கேணி சந்தியில் ஆரம்பமாகி பேரணியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து அங்கு மகஜர் கையளிக்கப்பட்டதுடன் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்' வெடுக்குநாறி மலையில் எழுந்தருளியிருக்கும் எங்கள் சிவனின் சாபத்திற்கு ஆளாகாதீர், சிவ வழிபாட்டில் இருந்தவரை எதற்காக கைது செய்தாய் , வெடுக்குநாறிமலை தமிழர் சொத்து, பொலிஸ் அராஜகம் ஒழிக , நெடுங்கேணி பொலிஸாரே பொய் வழக்குகளை மீளப்பெறு உள்ளிட்ட வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடன் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |