வவுனியா, (vavuniya)மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று திங்கட்கிழமை (06.05.2024) மாலை ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மதுராநகர் கிராமத்திலே இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மதுராநகர் பகுதியில் அமைந்துள்ள இறந்தவரின் வீட்டில் மாமனார், மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மது அருந்தியுள்ளனர்.
இதன்போது மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இக்கைகலப்பின் போது மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மண்வெட்டி மற்றும் தலைக்கவசங்களினால் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான மாமனார் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி அருகில் உள்ள வீட்டின் வாசலில் வீழ்ந்துள்ளார்.
வீழ்ந்து கிடந்த குறித்த நபரினை அயலில் உள்ளவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுயை கணேசமூர்த்தி (மோகன்) என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளடன்,
குடும்ப தகராறினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை சிதம்பரபுரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
(Vavuniya Tamil News.....)