பெய்ரூட்டில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் போராளிக் குழுவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் தெற்கில் உள்ள தெஹியேவில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தில் சந்திப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போதே, இஸ்ரேலிய விமானப்படை துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஹிஸ்புல்லாஹ் தரப்பு இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை.
நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் அமைப்பை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வழிநடத்தியுள்ளார்.
இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இன்று இஸ்ரேலை நோக்கி எறிகணைகளை ஏவியதை அடுத்து, இஸ்ரேலும் பதிலுக்கு கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதற்கிடையில் லெபனானுடன் பதற்றம் அதிகரித்து வருவதால், கூடுதல் உதவி வீரர்களை அணி திரட்டுவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய தாக்குதல்களால், லெபனானில் கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 720 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.