Srilanka News Tamil
காலியில் உள்ள முன்னணி ஹோட்டலுக்குச் சென்று உணவு முன்பதிவு செய்த ஒரு குழுவை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு இந்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்தக் குழு நேற்றுமுன்தினம் இரவு உணவை முன்பதிவு செய்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, உணவு தீர்ந்துவிட்டதாக ஹோட்டல் பொறுப்பாளர் கூறியுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள், "உணவு இல்லை என்று தெரிவிக்க 30 நிமிடங்கள் ஆனதா?" என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஹோட்டல் ஊழியர்கள் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஹோட்டலில் சுமார் 30 பேர் தங்களைத் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கூறியுள்ளனர்.
தம்மை தாக்குவதாக கூறிய தகவலைத் தொடர்ந்து, அவர்களது குடும்ப உறுப்பினர்களில் மற்றொரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு பிரவேசித்துள்ள நிலையில் அவர்களையும் ஹோட்டல் ஊழியர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனுக்கு கண்ணில் காயம்
இந்த எதிர்பாராத சம்பவத்தால் 28 வயது இளைஞனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதுடன், 17 வயது சிறுவனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அத்துடன் 14 வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், மோதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உணவகத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருகின்றன.