நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை! திடீரென கைது செய்யப்பட்ட 300 பேர்

  

Tamil lk News

கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட கந்தானை, ஜா எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 300இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையை பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மேற்கொண்டனர்.



 நேற்று இரவு முழுவதும் இந்த அவசர சிறப்பு தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


 நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் செயல்முறையின் ஒரு படியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



இந்த சிறப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வது உட்பட பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.


 இந்த தேடுதல் நடவடிக்கைகள் உரிய தொழில்முறை மற்றும் ஒழுக்கத்தை பேணுவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச இடையூறுகளுடன் அவை மேற்கொள்ளப்பட்டதாகவும் உறுதியளிக்கப்பட்டது.


நாடு முழுவதும் நிலையான அமைதி மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அடையாளம் காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்