துருக்கியில் இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம்! 2 குழந்தைகள் உயிரிழப்பு

  

Tamil lk News

துருக்கி நாட்டில், திடீரென 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.




துருக்கியின் கெப்ஸே நகரத்தில், இன்று (ஒக்.9) காலை 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது, அங்கு வசித்து வந்த 3 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குடும்பம் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.




இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த துருக்கியின் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கி பலியான ஹயூருனிஸ்ஸா (வயது 14) என்ற சிறுமி மற்றும் அவரது சகோதரர் முகமது எமிர் (12) ஆகியோரது உடல்களை மீட்டுள்ளனர்.




இந்தச் சம்பவத்தில், பலியான குழந்தைகளின் மற்றொரு சகோதரி திலாரா பிலிர் (18) பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர்களது பெற்றோரின் நிலைக்குறித்து தெரியாததால் அவர்களைத் தேடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில், மாயமான பெற்றோரைத் தேடும் பணியில் துருக்கியின் மீட்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 627 வீரர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், திடீரென 7 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததற்கு அங்கு மேற்கொள்ளப்படும் மெட்ரோ பணிகள்தான் காரணம் என உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், சம்பவத்துக்கான காரணம் குறித்து அரசு அதிகாரிகள் எந்தவொரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை.



இத்துடன், டெக்டோனிக் தகடுகளின் மிகப் பெரியளவிலான பிளவுக் கோட்டின் மீது துருக்கியின் கெப்ஸே நகரம் அமைந்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு கெப்ஸே உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட 7.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 18,000-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்