"டித்வா" சூறாவளியானது தற்போது திருகோணமலையில் இருந்து தென் திசையாக சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது. ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது,
"டித்வா" ( Ditwah ) சூறாவளியின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்வதுடன் திருகோணமலை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 75 மில்லமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக் கூடும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 80 - 90 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மிகப் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி மிகப் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 80 - 90 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு,காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 3.5 - 4.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல் அலைகள் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு,காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 3.5 - 4.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல் அலைகள் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு முந்தைய ஆபத்து அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 2 மணி முதல் நாளை (29) பிற்பகல் 2 மணி வரையான 24 மணி நேர காலப்பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையின் மூன்றாம் மட்டத்தை (சிவப்பு) வெளியிட்டுள்ள இந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கண்டி , கேகாலை, குருணாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.



