திருகோணமலை(Trincomalee) கடற்கரையோரமாக திடீரென இரவோடிரவாக ஒரு பௌத்த கட்டுமானத்தை கட்டியெழுப்புவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து சற்று பதற்றமான நிலமை உருவாகியது.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரயின் வளாகத்திற்குள் இன்று (16.11.2025) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றது.
அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நேற்றையதினம் இரவோடு இரவாக குறித்த பகுதியில் பெயர்ப்பலகை நடப்பட்டு, கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த சட்டவிரோத கட்டுமானப்பணிகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக நீதிமன்றில் பொலிஸாரினால் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.



