போலி இணையத்தளத்தை அமைத்து வீசா வழங்குவதற்காக பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று (மார்ச் 28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தேகம பிரதேசத்தில் வைத்து மடிக்கணினி மற்றும் கையடக்க தொலைபேசியுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்வில பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர்.
கொழும்பு இந்திய விசா நிறுவகத்தின் கிளையொன்று கண்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் அமைந்துள்ளதுடன், அந்த நிறுவனத்தின் தகவல்களை குறிப்பிட்டு இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு சிலருக்கு விசா வழங்குவதற்காக மக்களிடம் பணம் வசூலித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று (மார்ச் 29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



