விளையாட்டுத் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு

tamil.com

 

இலங்கையின் விளையாட்டுத் துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னணி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (மார்ச் 25) முற்பகல் டயகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் திடலில் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.


ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திறமையான 100 விளையாட்டு வீரர்களை தெரிவு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.


ஒவ்வொரு வருடமும் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேச மட்டத்தை வெற்றிகொள்ளக்கூடிய விளையாட்டு வீரர்கள் குழுவை சில வருடங்களில் இலங்கையில் உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


10 – 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விளையாட்டுத் திறன்களை இனங்கண்டு அதற்கேற்ப முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.


கொழும்பு பிரதான பாடசாலைகள் தலைமையில் நாடளாவிய ரீதியில் உள்ள 100 பாடசாலைகள் இந்த வருடத்திற்குள் பேஸ்பால் விளையாட்டை பிரபலப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பேஸ்பால் விளையாட்டில் ஆசியாவின் பிரதான நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.


பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அந்தத் தகுதியை தமது பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான அடிப்படைத் தகுதியாகக் கருதி அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.


இன்று காலை டயகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பிரதான விளையாட்டு மைதானம், பேஸ்பால் மைதானம் மற்றும் பயிற்சிப் பாதைக்கு சென்று அங்கு விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டு வீரர்களின் விபரங்களை கேட்டு சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.


விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கான நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானம், விளையாட்டு தடங்கள் போன்ற பல இடங்கள் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்றதாக காணப்பட்டது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்