திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் போது மக்களின் நலன்கள் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கவர்ச்சிகரமான பெயர்களுடன் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்கள் மக்களுக்கு சேவை செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கான கலந்துரையாடல் இன்று (ஜூன் 28) நிதியமைச்சில் இடம்பெற்றது.
2016 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மேம்பாட்டு முகமையின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட தொடர்புடைய திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 62.4 மில்லியன் யூரோக்கள் ஆகும். குறித்த திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சில கட்டிடங்கள் கூட தற்போது பராமரிப்பாளர்கள் இல்லாத இடமாக மாறியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சில அரச நிறுவனங்கள் திட்டப்பணிகளை ஆரம்பிக்கும் முன்னர் பிரதேச மக்கள் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காததும் இதற்கு ஒரு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த திட்டத்தின் கீழ் தொடர்பில்லாத பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், புகையிரத நிலைய வளாகம், வானொலி கூட்டுத்தாபனத்தின் திறந்தவெளி அரங்கு என்பனவும் உரிமையாளர்கள் இல்லாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆறாம் கட்ட திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட அனுராதபுரம் தெற்கு பல்வழி போக்குவரத்து நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, அந்த இடத்தை பொதுமக்களுக்கும், பஸ் போக்குவரத்துக்கும் வசதியாக அமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.



