குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம்


 குருந்தூர் மலை பகுதியில் பொங்கல் நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்த நிலையிலே தமிழ் தரப்புகள் பொங்கல் நிகழ்வுக்காக குருந்தூர் மலைக்கு சென்றிருந்தனர்.


குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையின் விகாராபதி கலகமுக சாந்தபோதி ஏற்கனவே முகநூல் வாயிலாக இன்றைய தினம் பொங்கல் நிகழ்வை திட்டமிட்ட வகையில் குழப்புவதற்காக மக்களை ஒன்று சேருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய சிங்கள மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் அடங்கலான இரண்டு பேருந்துகளில் வந்து சேர்ந்தவர்கள் அங்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.



இதன் போது தமிழ் மக்கள் தரப்பினாலும் பொலிஸரும் அவர்களுக்கு எந்த விதமான இடையூறும் வழங்கப்படவில்லை.


இதனைத் தொடர்ந்து அவர்களின் வழிபாடு நிறைவுபெற்று அவர்கள் செல்லும்போது அங்கே தமிழ் தரப்புக்கள் வருகை தந்து அந்தக் குருந்தூர் மலையிலே ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைக்கப்பட்ட இடத்திலே பொங்கல் பொங்க முற்பட்ட போது அங்கு வருகை தந்த பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள மக்கள் அவர்களோடு பொலிஸரும் இணைந்து தொல்பொருள் பிரதேசத்தில் நெருப்பு மூட்ட முடியாது என்ற காரணத்தை காட்டி  நெருப்பு மூட்ட விட மாட்டோம் என்று எதிர்ப்பை தெரிவித்தனர்.




இந்த நிலையில் தொல்பொருள் திணைகள அதிகாரிகள் நிலத்தில் நெருப்பு மூட்ட முடியாது என்றும் அதற்கு பதிலாக  மூன்று கற்களை அடுக்கி அதன் மேல் தகரம் ஒன்றை வைத்து அதன் மேல் பொங்கல் முடியும் என அனுமதி அளித்தனர்.


இருப்பினும் அங்கு வருகை தந்த கிளிச்நொச்சி முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியான சமுத்திர ஜீவா குறித்த விடயம் தொடர்பிலே அந்த சிங்கள மக்களோடு இணைந்து பொங்கல் நிகழ்வை குழப்புவதற்காக முன் நின்று செயற்பட்டு அங்கு பொங்கினால் சமாதான குலைவு ஏற்படும் என்ற கருத்தை கூறி வெளியேறுமாறு தெரிவித்தார்.



mullaitivu tamil news


இதன்போது தமிழ் தரப்புக்கள் தங்களுடைய கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு நாங்கள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பொங்குவோம் எனக்கூறி கற்களை அடுக்கி விறகுகளை வைத்து நெருப்பு மூட்டிய போது.


 அந்த இடத்தில் நின்ற பொலிஸ் அதிகாரிகள் சப்பாத்து கால்களால் அந்த நெருப்பை அணைத்து பொங்கல் பொங்குவதை தடுத்தனர்.




இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அந்த இடத்திலே அமர்ந்திருந்து நாங்கள் பொங்காமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என கூறி அந்த இடத்தில் இருந்தனர்.


தொடர்ச்சியாக அங்கிருந்து சிவபுராணம் பாடி கொண்டிருந்த வேளையில் மீண்டும் அங்கு வந்த பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சிவபுராணம் பாடுவதற்கு குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டனர்.




அதேவேளை, அவர்கள் பிரித்தோதும் நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு இருந்தனர் அவர்களை வெளியேற்றுமாறு பொலிஸாருக்கு கூறிய போது அவர்களையும் வெளியேற்றி இவர்களையும் வெளியேற வேண்டுமென பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களை விரட்ட முற்பட்டபோது முரண்பாடுகள் ஏற்பட்டது 


பின்னர் அந்த இடத்திலேயே குறிப்பிட்ட நேரம் பொங்கல் பொங்காது வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸார் கூறியதையடுத்து அந்த இடத்தில் கற்பூரம் கொளுத்தாமல் மலர்களை மட்டுமே தூவி பாலால் அபிஷேகம் செய்து வழிபாடுகள் இடம் பெற்றன.




இது தொடர்பாக மக்கள் பொலிஸார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.


திட்டமிட்ட வகையிலே சிங்கள மக்களின் வழிபாடுகளுக்கு அனுமதி அளித்து தங்களிடம் நீதிமன்ற அனுமதி இருந்தும் அந்த இடத்தில் வழிபாடு செய்யவிடாது செயற்பட்ட பொலிஸார் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முன்வைத்திருந்தார். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்