முல்லைத்தீவு - கொக்கேளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட கொக்குத்தொடுவாய் மத்திய பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் உடல்களாக இருக்கலாம் என சந்தேகப்படும் மனித எச்சங்கள் மற்றும் உடைகள் மீட்கப்பட்டதை அடுத்து இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வு பணியானது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி T. பிரதீபன் முன்னிலையில் முல்லைதீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா ஆகியோருடன் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது.
அகழ்வுப் பணி
குறிப்பிட்ட அகழ்வுப் பணியானது ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல கண்காணிப்புகளுக்கும் மத்தியில் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் கடந்த 29.06.2023 திகதி அன்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு நீர் இணைப்பு பணிகளுக்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய வேலைகளில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொக்குத்தொடுவாய் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக 30.6.2023 திகதி அன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினத்தின் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா குறித்த மனித எச்சங்கள் எடுக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மேலும் குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு நீதிபதி உத்தரவிட்டதோடு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கா அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரைக்கும் எச்சங்கள் அளிக்கப்படாமல் பாதுகாக்கும் படியும் கொக்கிளாய் பொலிஸாருக்கு பணிபுரி விடுக்கப்பட்டுள்ளது என்பதன் குறிப்பிடத்தக்கது.