(manner tamil news-tamillk) மடு மாதாவிற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்ட பங்குகளுக்கு திருப்பயணமாக எடுத்துச் செல்லும் நடவடிக்கை இன்று (7) ஞாயிற்றுக்கிழமை காலை மடு திருத்தலத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
25 ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு
1924 ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் அவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு 25 ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட பாதுகாவலியாம் மடு அன்னையின் திருச்சுரூபம் மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழமையான தொன்றாகும்.
மன்னார்- வவுனியா மடு அன்னையின் திருச்சுரூபம் செல்லப்படுவதற்கு ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இதற்கமைய இவ்வருடமும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுரூபம் மடுவிலிருந்து மன்னார் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறை மாவட்டங்களின் பங்குத் தளங்களுக்கு இன்று ஞாயிறு (07) முதல் கொண்டு செல்லப்படுவதற்கு சகல ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
'மரி அன்னையோடு நம்பிக்கையின் திருப்பயணிகளாகும்' என்ற கருப்பொருளுக்கேற்ப மக்களின் தேவைகள் நிறை வேறப்படவும் . நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும் சமாதானத்துக்கான ஒரு திருப்பயணமாக இது அமைவதாக மன்னார் திரு அவையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை 8 மணியளவில் மடு அன்னையின் திருச்சுரூபம் அன்னை வீற்றிருக்கும் சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்பட்டு மன்னார் பேராலயத்திற்கு எடுத்து வரப்பட்டார்.
மன்னார் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் நகர் வரை மோட்டார் சைக்கிள் பவனியூடாக மடு அன்னை ஊர்தியில் அழைத்து வரப்பட்டார்.
சமாதான புறா
அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச் சொரூபம் அமைந்துள்ள பகுதி புதுப்பிக்கப்பட்டு மன்னார் மறைமாவட்ட ஆயரினால் திறந்து வைக்கப்பட்ட தோடு,சமாதான புறா மற்றும் சமாதான பலூன் என்பன பறக்கவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஊர்தி பவனி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் நோக்கி பயணித்தது.
இதற்கமைய மடு அன்னையின் திருச்சுரூபம் இறைமக்களின் தரிசிப்புக்காக இன்று ஞாயிறு (07) காலை 11.30 மணியிலிருந்து நாளை திங்கட்கிழமை (08) காலை 8 மணி வரைக்கும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் எழுந்தருளி இருப்பார்.
அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தின் ஏனைய பங்குகளை நோக்கி மடு அன்னையின் திருப்பயணம் இடம் பெறும்.இன்றைய தினம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





