(srilanka tamil news-tamillk) சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்குத் தேவையில்லை என்று அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
'வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்' - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார் என்று சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
அவர்களின் வியூகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லை.
அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் எடுத்துச் செயற்படும் ஜனாதிபதி ரணில், அதற்கான இலக்கை அடையும் தருவாயில் அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து அதிலும் வெற்றி காண்பார்.
இதற்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்." - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |