முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் தான் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்குடியிருப்பு - கைவேலியில் வசிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான குணசிங்கம் கசேந்திரன் என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்படி ஏழு அடி இரண்டு அங்குல உயரம் கொண்ட இவர், தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக கூறிவருகிறார்.
இலங்கையில் எங்கும் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை காணமுடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான கசேந்திரன், பேருந்தில் இருக்கை கிடைக்காத வரையில் பயணிக்க முடியாது என்றும், நீண்ட தூர பேருந்தில் பயணித்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறுகிறார்.
முச்சக்கர வண்டி ஓட்டுநராக தொழில் புரியும் கசேந்திரன் கழுத்தை வளைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலைக்கு உள்ளாவதாகவும் அதனால் மிகவும் சிரமமடைவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.