செனகலில் 85 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 737 என்ற விமானம் தீப்பிடித்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்ததில் விமானி உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் செனகல் பிளேஸ் டியாக்னே சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை(8) இடம்பெற்றதாக செனகல் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிரான்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் செனகல் விமான சேவைக்கு சொந்தமான விமானம் 79 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் நான்கு கேபின் ஊழியர்களுடன் அயல் நாடான மாலியில் உள்ள பமாகோவிற்கு சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
போயிங் 737-300 ரக விமானம் தீப்பிடித்து ஓடுபாதையில் இருந்து சறுக்கியதற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. உடனடியாக எரிந்த விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டதோாடு, விமானம் தீப்பிடித்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றையவர்கள் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த வாரம் போயிங் விமானம் சம்பந்தப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
துருக்கியில் வியாழக்கிழமை தரையிறங்கும் போது போயிங் விமானத்தின் டயர் ஒன்று வெடித்ததில் 190 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக துருக்கியின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜனவரி மாதம் போர்ட்லாண்டில் இருந்து கிளம்பிய அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென அதனின் கதவு உடைந்து விமானத்தை விட்டு பிரிந்து சென்றது.
இதன் காரணமாக போர்ட்லாண்டு விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் போயிங் 737 மேக்ஸ் ஜெட் விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானதில் 346 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.