திருகோணமலை (Trincomalee) -மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து 25 வயது யுவதி ஒருவரின் சடலம் நேற்று (05) மாலை மீட்கப்பட்ட பின்னணியில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியை, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் காதலனின் தந்தை, சித்தப்பா மற்றும் பாழடைந்த கிணற்றில் சடலத்தை போட்டு அதற்கு மேலால் குப்பைகளை போட்டு மூடியதாக சந்தேகிக்கப்படும் பெக்கோ இயந்திரச் சாரதி, பெக்கோ வாகன தரகர், கொலை செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சந்தேக நபர் என ஆறு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து நேற்று (05) மாலை யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டது.
பாழடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அகழ்வு செய்வதற்காக மூதூர் நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் குறித்த கிணறானது பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வு செய்யப்பட்டபோதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சேருநுவர-தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி என தெரியவருகின்றது.
அதேவேளை குறித்த சடலமானது சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன், யுவதியின் கைப்பையும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதி , காதலனினால் கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் 25 வயதான காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Trincomalee Tamil News - Tamil lk News




