ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தினை நடாத்த இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிறிகந்தனேசன் புயல்நேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மாம்பழம் சந்தியில் உள்ள அலுவலகம் ஒன்றில் நேற்றையதினம்(18) நடைபெற்ற இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு மாகாணத்தில் அண்ணளவாக 17 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இவற்றில் 80 சதவீதமானவர்கள் பெண் ஆசிரியர்கள். அவர்கள் மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வவுனியா வடக்கு - தெற்கு போன்ற அதி கஷ்ட பிரதேசங்களில் மிகவும் இன்னல்களை சந்திக்கின்றனர்.
இவர்கள் ஒரு தசாப்தத்திற்கு மேலாக வழி மாவட்டத்தில் வேலை செய்கின்ற போதும் வாழ்வியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று தற்போது நாட்டில் சனத்தொகை பற்றாக்குறை. இந்த விடயத்தில் இடமாற்ற பிரச்சனையும் செல்வாக்கு செலுத்துகின்றது.
தற்போது இருக்கின்ற அரசாங்கம் அரசியல் ரீதியான நியமனத்தை வழங்குவதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வரலாற்றில் பேசப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தை பெற்றுக் கொடுத்தோம்.
![]()
மஸ்கெலியா தீ விபத்தில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை
மேலும் வாசிக்க![]()
12 வாகன பற்றரிகளுடன் வவுனியா நெளுக்குளத்தில் ஒருவர் கைது !
மேலும் வாசிக்க
இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து ஒரு சுகயீன விடுமுறை போராட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகத்தின் முன்னால் முன்னெடுப்பதோடு, யாழ்ப்பாண நகரில் ஒரு வீதி ஊர்வலத்தையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.