Srilanka News Tamil
இந்திய பிரதமர்( Prime Minister of India) நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதேவேளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு(Srilanka) வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் எரிசக்தி, பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு 8.33 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.
அவரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்திய பிரதமருடன் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோர் அடங்கலாக 60 பேர் கொண்ட தூதுக்குழு இலங்கை வந்துள்ளது.
இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.