பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

 

Tamil lk News

 கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது இரங்கலைத் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இந்தச் செய்தியைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



"நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பேருந்து விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். 



நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் மிகவும் அவதானம் செலுத்தி வருவதோடு, இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 



தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இந்த விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். "Clean Sri Lanka" திட்டத்தின் கீழ் இதற்காக ஒரு திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. 



இன்று (11) காலை நடந்த இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். 



காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து தொடர்புடைய வைத்தியசாலைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்