வவுனியாவில்(Vavuniya) உள்ள உள்ளூராட்சி சபைகளில்(local government councils) கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றையதரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும்(Sri Lankan Tamil Nationalist Party) இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா மாநகரசபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும். அதேபோல வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேசசபைகளில் தமிழரசுக்கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் நாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்ப்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர் பிரதி தவிசாளர்களை நியமிப்பது எங்களுக்கு சிறிய பிரச்சனை. சபை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எங்களுக்குள் பேசி தீர்மானித்துக் கொள்வோம்.
அத்துடன் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் போட்டியிட்டு வென்றவர்களுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
சபைகள் தொங்கு நிலையில் உள்ள ஆட்சியாக இல்லாமல் பூரண பலம் கொண்ட முடிவுகளை எடுக்க கூடிய மன்றங்களாக வவுனியாவில் உள்ள நான்கு மன்றங்களும் இருக்கவேண்டும். எனவே வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்க கூடிய சூழல் இருக்கிறது.
அத்துடன் இந்த இணக்கப்பாடு உள்ளூராட்சிமன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடரவேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த இணக்கப்பபாட்டை வடகிழக்கு முழுவதும் தொடர்வதற்கு இரண்டு கட்சிகளின் தலைமைகளும் பேசி ஒரு முடிவிற்கு வருவார்கள் என எதிர்பார்கிறோம். என்றார்.