யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாணம்(Jaffna) இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டிருந்ததால், அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன.
அதேவேளை மந்திரிமனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே இன்றைய தினம் மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரிமனை, பாதுகாக்கப்படவேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் அண்மையில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட யாழ். கடவுச்சீட்டு அலுவலகத்திற்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் கடவுச்சீட்டு சேவைகளை பெற சென்ற மக்கள் அவதிக்குள்ளானதாக தெரியவருகின்றது.