அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் எலிக்காய்ச்சலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் என்.சி.டி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் எலிக்காய்ச்சலினால் 743 நோயாளர்கள் பதிவாகியதாகவும் அவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
பாரிய சிக்கல்
சீரற்ற காலநிலை காரணமாக எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால், அவர்களுக்கு நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கு அதிக மருந்துகளை வழங்க வேண்டிய அவசியம், மனித வள பற்றாக்குறை, அதிக பணியாளர்களை நியமிக்க வேண்டிய தேவை, அவசர சிகிச்சை பிரிவுகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் போன்ற பல பிரச்சனைகளை மருத்துவமனை ஊழியர்கள் சந்திக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"லெப்டோஸ்பைரா” என்ற தொற்று உடலுக்குள் செல்வதால் இதய நோயாளிகளுக்கு வழங்கப்படுவது போன்ற வசதிகளை வழங்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
போதுமான வசதிகளை வழங்குவதற்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் முடிந்தவரை அவதானத்துடன் செயற்படுமாறும் அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.