ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த அனில்குமார் பொல்லா என்ற 29 வயது இளைஞன் 240 கோடி இந்திய ரூபாய்களை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்றுமதி தொழில் செய்து வரும் அவர், 23ஆவது அதிஷ்ட நாள் குலுக்கலில் ஏழு வெற்றி எண்களும் பொருந்தியதால் முழு பரிசுத் தொகையையும் யாருடனும் பகிராமல் தனியாக வென்றுள்ளார்.
அதிஷ்ட இலாபச் சீட்டு குழுவிடமிருந்து அழைப்பு வந்த போது, தான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாக அனில்குமார் தெரிவித்துள்ளார்.
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெல்வது தனது நீண்ட நாள் கனவு எனவும் இதனை நம்ப முடியாது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த லாட்டரி வரலாற்றிலேயே இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இந்தியர், லாட்டரி டிக்கெட்டை வாங்கும்போது தாயின் பிறந்தநாள் எண்ணை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார்.
“என் தாயின் ஆசீர்வாதம் எனக்கு இத்தனை பெரிய அதிர்ஷ்டத்தை தந்தது,” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிக்குப் பிறகு, அந்த இந்தியரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 88 இலட்சம் போட்டியாளர்களில் அனில்குமார் பொல்லா ஒரு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



