இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஏழு மாடிக் கட்டிடம் ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஒரு 7 மாடிக் கட்டிடம் ஒன்றின் முதல் தளத்திலிருந்த மின்கலன் வெடித்ததில் ஆரம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் தீ மேல் தளங்களுக்குப் பரவியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை, ஆண்களும் மற்றும் 15 பெண்கள் என குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் என மத்திய ஜகார்த்தா பொலிஸ் தலைவர் சுசாத்யோ பூர்ணமோ கொண்ரோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தீக்காயங்களால் பாதிக்கப்படவில்லை என்றும், அவர்கள் பெரும்பாலும் மூச்சுத் திணறல் காரணமாகவே இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
உடலங்கள் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட இந்தக் கட்டிடம், சுரங்கம் மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வான்வழி ஆய்வுக்கான ட்ரோன்களை வழங்கும் டெர்ரா ட்ரோன் இந்தோனேசியா என்ற நிறுவனத்தின் அலுவலகமாகும்.
இந்த நிறுவனம் ஜப்பானைத் தளமாகக் கொண்ட டெர்ரா ட்ரோன் கூட்டுத்தாபனத்தின் இந்தோனேசியப் பிரிவு ஆகும்.
தீ அணைக்கப்பட்ட நிலையில், கட்டிடத்திற்குள் இன்னும் சிக்கி இருக்கக்கூடியவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.


