அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள இரத்மலானையில் உள்ள இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மேற்கொண்ட பல பயணங்களில் குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டிய விமானியாக இணைந்து செயற்பட்டிருந்தார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவப் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இன்று முற்பகல் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பூதவுடல் மீதான இறுதிச் சடங்குகள் தெஹிவளை – கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இன்று மாலை நடைபெற்றது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


