பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதா அல்லது முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சேவையை நீடிக்க வேண்டுமா என்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் பரிந்துரையை ஜனாதிபதி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை (ஜூலை 9) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், அங்கு அமைச்சரின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி வழங்கிய சேவை நீடிப்பு ஜூன் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவாரா அல்லது சந்தன விக்ரமரத்னவுக்கு மேலும் நீடிப்பு வழங்கப்படுவாரா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இந்தப் பின்னணியில் கடந்த இரண்டு வாரங்களாக பொலிஸ் மா அதிபர் கதிரை வெற்றிடமாக இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமைச்சர் திரான் அலஸுக்கும் இடையில் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது அல்லது சந்தன விக்ரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பதை சிபாரிசு செய்யுமாறு ஜனாதிபதி அமைச்சர் திரன் அலஸுக்கு அறிவித்துள்ளார்.
நாளை பிற்பகல் நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி உடன்பாடு எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அல்ஸை கடந்த வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசியதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.