குறைந்த வருமானம் பெறுவோருக்கு இன்று வழங்கப்படும் இருபது கிலோ அரிசியின் பலன் இந்த மக்களுக்கு மிகவும் பெறுமதியானது. ஆனால் இந்த பலன்களை நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கக்கூடாது என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala De Silva) தெரிவித்துள்ளார்.
வெலிமடை(Welimada) அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி நிவாரணம் வழங்கும் 2024 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) பொருளாதாரத் திட்டத்தின்படி, மக்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கு அதிக காலம் எடுக்காது.
மக்களின் கைகளுக்கு அதிக வருமானத்தை கொண்டு வரும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி தற்போது செயற்பட்டு வருகின்றார். அதனை உலகில் யதார்த்தமாக்கி வருகிறார்.
இதன் விளைவாக, இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. மேலும், மக்களின் சிரமமான வாழ்க்கைச் சூழலிலிருந்து காப்பாற்ற 15,000 ரூபாய் “அஸ்வெசும” மூலம் வழங்கப்பட்டது.
மேலும், மக்களுக்குத் தேவையான காணிகள் “உறுமய” திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வாய்ப்பேச்சிற்கு வழங்கிய வாக்குறுதிகள் அல்ல. கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி விதைத்த யதார்த்தம் இதுதான் என குறிப்பிட்டுள்ளார்.